சாதி கலவரம், மதக்கலவரம் ஏற்படுத்தி திமுக ஆட்சியை அப்புறப்படுத்த சிலர் சதி செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாகர்கோவிலில் கலைஞர் கருணாநிதியின் சிலையை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, திமுக ஆட்சியை அப்புறப்படுத்த சதி நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார். திராவிட மாடல் என்று மக்களை கவரும் வகையில் நல்லாட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்களே, இதை தொடர்ந்து விட்டால் என்னாவது என்று ஆட்சியை அப்புறப்படுத்த பல்வேறு சதி திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றார். மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, சாதிக் கலவரத்தை ஏற்படுத்தலாமா அல்லது மக்களை பிளவுபடுத்தலாமா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய முதல்வர், நமக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என்று கூறினார். மத்திய பாஜக ஆட்சியை அகற்ற மதச்சார்பற்ற சக்திகள் கவுரவம் பார்க்காமல் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அண்ணா, கலைஞர், ஆகியோர் எந்த லட்சியத்திற்காக இந்த கட்சியை தொடங்கினார்களோ அந்த லட்சியத்திற்காக பாடுபட வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.