பாஜக மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவில் இருந்து விலகினார். அதில், கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ? தான் பதவிக்கு வரும்போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்? ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார். நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்குத் தெரியும். வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு அவர் புனிதராகத்தான் தெரிவார். இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் எத்தனை பேரை வெளியே அனுப்பப் போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
எப்படியும் என்னை திட்டுவார்கள். ஆனால், கட்சியின் மீது தீவிர பற்று கொண்ட ஒருவன் போகிறேன் என்றால், இவர்கள் எந்தளவுக்கு கேவலமாக இருக்கிறார்கள் என்று கொஞ்சமாவது யோசித்து பாருங்கள். இதுவரை இந்த கட்சிக்கு என்னால் முடிந்த அளவிற்கு 100% உழைத்திருக்கிறேன் என்று பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் திலீப் கண்ணன், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளார். ஏற்கனவே நிர்மல்குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது திலீப் கண்ணன் இணைந்துள்ளார்.