உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, மதுரை கே.கே.நகர் பகுதியில் அமைந்திருந்த பெரியார் தோரண நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டது.

1981-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு மாட்டுத்தாவணி, கே.கே.நகர், வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் தோரண நுழைவுவாயில்கள் அமைக்கப்பட்டன. பின்னர் சாலை விரிவாக்கம் மற்றும் அதிகரித்த போக்குவரத்தால் மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயிலும், கே.கே.நகர் பெரியார் தோரணவாயிலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அவற்றை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, கடந்த ஆண்டு மாட்டுத்தாவணி நக்கீரர் தோரணவாயில் அகற்றப்பட்ட நிலையில், தற்போது கே.கே.நகர் பெரியார் தோரணவாயிலும் பொக்லைன், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் இடிக்கப்பட்டது. இதையொட்டி அப்பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வில்லாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் அமைந்துள்ள தோரணவாயில்களும் அகற்றப்பட்டு, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய தோரணவாயில்கள் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.




