• Fri. Apr 19th, 2024

கரூர்காரர்கள் நாட்டாமையால் ஒதுங்கும் கோவை திமுக நிர்வாகிகள்

கரூர் மாவட்டத்திலிருந்து ஆட்களை அழைத்துச்சென்று கோவை மாநகராட்சி தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வருகிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இதனிடையே கரூரிலிருந்து இங்கு வந்து நம்மை நாட்டாமை செய்ய இவர்கள் யார் என்கிற வகையில், கோவை திமுக நிர்வாகிகள் பலரும் அப்செட் ஆவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த விவகாரத்தை மிக கவனமாக கையாளத் தொடங்கியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளை கூல் செய்யும் விதமாக அவர்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது தனிக்கவனம் செலுத்தி நிறைவேற்றி தருகிறாராம். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக கோவையில் அரசியல் செய்து வரும் அமைச்சர் செந்தில்பாலாஜி, எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். வெற்றி தோல்வி என்பதைக் கடந்து தேர்தல் முடிவை தனது கவுரவப் பிரச்சனையாக கருதும் அமைச்சர் செந்தில்பாலாஜி, நேரடியாக களமிறங்கி கோவையில் முகாமிட்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.

இந்தச் சூழலில் தாம் விரட்டி வேலை வாங்குவதற்கு ஏதுவாக கரூர் மாவட்டத்திலிருந்து நிர்வாகிகளை கோவைக்கு அழைத்துச்சென்றுள்ள அவர் வார்டு வாரியாக பணிகளை பிரித்துக் கொடுத்து டிரில் எடுக்கிறார். அமைச்சரின் அறிவுறுத்தல்படி கரூர் திமுக நிர்வாகிகளும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இது கோவை மாநகர திமுக நிர்வாகிகள் பலருக்கு அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கரூரிலிருந்து இங்கு வந்து நம்மை நாட்டாமை செய்ய இவர்கள் யார் என்கிற வகையில், கோவை திமுக நிர்வாகிகள் பலரும் தொடக்கத்தில் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆடுற மாட்டை ஆடி கறக்கனும், பாடுற மாட்டை பாடி கறக்கனும் என்ற வித்தையை அறிந்து வைத்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, டிரான்ஸ்பரில் தொடங்கி இன்னும் சகல விதமான கோரிக்கைகளை செய்துக் கொடுத்து அதிருப்தியில் இருக்கும் கோவை திமுக நிர்வாகிகளை வழிக்கு கொண்டு வருகிறாராம்.இதனிடையே வார்டு வாரியாக களமிறங்கியுள்ள கரூர் படையினர், அந்தந்த பகுதி திமுக நிர்வாகிகளிடம் விவரங்களை சேகரித்து இத்தனை வாக்குகளுக்கு ஒருவர் பொறுப்பு என்கிற வகையில் இலக்கு நிர்ணயிக்கிறதாம். அமைச்சர் பார்க்கமாட்டார் என எண்ண வேண்டாம் என்றும், தினமும் இரவு எத்தனை மணியானாலும் கோவை மாநகராட்சி தேர்தல் பணி குறித்து எங்களை அழைத்துப் பேசிவிட்டு தான் அவர் உறங்கவே செல்வார் எனவும் கூறும் கரூர் திமுக நிர்வாகிகள், நன்றாக ஃபீல்டு ஒர்க் செய்தவர்களுக்கு தேர்தலுக்கு பிறகு பெரிய பரிசு காத்திருக்கிறது எனவும் கோவை நிர்வாகிகளுக்கு பூஸ்ட் கொடுத்திருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *