தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் இன்று காலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர் மதுரை ஆரப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது மற்றும் களப்பணி குழுவினரின் பணிகளை காணொலி காட்சி மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். விழாவை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடிக்கு சென்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.