• Fri. Apr 19th, 2024

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் 7 பேர் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தானில் 6 பேர் பலியாகினர்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பல நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை பரந்து விரிந்துள்ளது. இரு நாட்டு எல்லையிலும் அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாண எல்லையில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது என்ற பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்கு இருநாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எல்லை வழியாக இருநாடுகளுக்கும் இடையே சரக்கு போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் ஷாமென் மாவட்டத்தில் லாலா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப்பகுதியில் நேற்று ஆப்கானிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பீரங்கியால் குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் பலியாகினர். இந்த தாக்குதலை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த பதில் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் ஒருவர் பலியானார்.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் மொத்தம் 7 பேர் பலியாகினர். மேலும் 29 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைய முயன்றதால் இந்த துப்பாக்கிச்சுடு நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச்சூடு, பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *