• Fri. Apr 26th, 2024

வாழப்பாடியில் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!

Byவிஷா

Sep 29, 2021

“கலைஞர் கருணாநிதியின் வரும் முன் காப்போம்” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மருத்துவத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆண்டுக்கு 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 385 வட்டாரங்கள், 21 மாநகராட்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்து 240 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்,அறுவை சிகிச்சை மருத்துவர், உடல் நோய் மருத்துவர், குழந்தை நல மருத்துவர் உள்ளிட்ட 16 சிறப்பு மருத்துவர்கள் குழு மூலம் பொது மக்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யவும், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. வரும் முன் காப்போம் திட்டம்.


இத்திட்டத்தின் தொடக்க விழா சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இன்று (செப்.29) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் முன் காப்போம் திட்டத்தைத் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஆத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைப்பதுடன், ஆலை உரிமையாளர்கள், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள், விசைத்தறி சங்கப் பிரதிநிதிகள் ஆகியோருடனும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *