

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று மத்திய ஆட்சியாளர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இதன்பின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2023 டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் நிதி கோரினோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்தனர். ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை.
வெள்ள நிவாரணமாக நாம் கேட்டது ரூ.37 ஆயிரத்து 907 கோடி. வேறு வழியில்லாமல் மத்திய அரசு நிதி கொடுத்தது எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.276 கோடி. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காட்டைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இப்படித்தான் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. சரிபோகட்டும், இந்த பட்ஜெட்டில் ஆவது தமிழகம் கோரிய நிதியை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்.
தமிழகத்தை மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. அவர்களைப் பொருத்தவரை கூட்டணியில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கும், தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும், நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாம் கேட்கிறோம். இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா? அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா?
தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதுமென்று நினைக்கிறார்களா? இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜகவிடமிருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது என்று கூறினார்.

