• Mon. Apr 21st, 2025

இந்தியை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ? – முதல்வர் ஸ்டாலின்!

ByP.Kavitha Kumar

Feb 19, 2025

இந்தி திணிப்புக்கு எதிராக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோளிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வாசலில் பெண்கள் கோலமிட்டனர். அவ்வாறு வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்ட வீடியோவைப் பகிர்ந்து, பாரதிதாசன் வரிகளை மேற்கோள் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்விக்கான நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், திமுக, அதிமுக உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, மும்மொழிக் கொள்கையை திணிக்க முயலும் மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பரவலாக இன்று பெண்கள் வாசலில் கோலமிட்டனர். குறிப்பாக, சென்னை அயப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோளிட்டு, தமிழக முதவ்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

முதல்வர் பதிவில் “ இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே – நீ
இட்டஅடி வெட்டப்படும் இந்திமொழியே
துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே – உன்
சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் – நல்
அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில்
உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் – உனை
ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?” எனக் குறிப்பிட்டுள்ளார்.