• Tue. Apr 22nd, 2025

அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ByP.Kavitha Kumar

Mar 17, 2025

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதனால் அவையை துணைத்தலைவர் பிச்சாண்டி நடத்தினார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை எஸ்.பி.வேலுமணி வழிமொழிந்தார்.

அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை தலைவர் அனைவருக்கும் பொதுவானவர். மக்கள் பிரச்சினைகளை அவையில் பேச அனுமதி அளிக்காமல் அவர் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ” மக்கள் நம்பிக்கையை இழந்தவர்கள் தான் இப்படி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து உள்ளனர். யார் மீதும் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். சட்டப்பேரவை தலைவர் நடுநிலையுடன் செயல்படுகிறார் என்பதை மக்கள் அறிவதற்கான விவாதமாக பார்க்கிறேன்.

நாம் விமர்சனம் செய்பவரை என்றோ ஒருநாள் நேரில் சந்திக்க வேண்டும் என்பதை உணர்ந்து விமர்சனம் செய்யுமாறு கலைஞர் கூறுவார். அப்பாவு யார் மனமும் புண்படாமல் பேசக்கூடியவர்,கனிவானவர், அதே நேரத்தில கண்டிப்பானவர். சில எதிர்க்கட்சியினர் சபைத்தலைவருடன் கண்ஜாடையில் பேசுவதை பார்த்திருக்கிறேன்.
என் தலையீடோ, அமைச்சர் தலையீடோ இல்லாத வகையில் அப்பாவு செயல்படுகிறார். பேரவை தலைவராக தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தில் பல உண்மைக்கு புறம்பான சில செய்திகள் உள்ளன. பேரவைக்கு ஒவ்வாத வார்த்தைகளை திமுகவினர் பேசினால் அவற்றை அவை குறிப்பிலிருந்து நீக்கி உள்ளார். தங்களிடம் சட்டப்பேரவை தலைவர் கண்டிப்பாக நடப்பதாக ஆளுங்கட்சியினர் கூறுகின்றனர். விவாதங்களின் போதும் அப்பாவு நடுநிலையுடன் நடந்து கொண்டுள்ளார்.

அதிமுக உறுப்பினர்கள் ஆவேசமாக பேசும்போது அவர்களை அமைதிப்படுத்த சபைத்தலைவர் முயல்வார். முந்தைய ஆட்சியில் ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சியினரை வசைபாடுவதும் கூட அவை குறிப்பில் ஏறும். பேரவையில் கடைபிடிக்க வேண்டிய பண்பாட்டின் தலைவனாக அப்பாவு செயல்பட்டுள்ளார்.
பேரவை தலைவராக அப்பாவு தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்” என்றார்.