சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதல்வர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் கடந்த 6-ந் தேதி இரவு தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்து வெள்ளக்காடாக்கியது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார் முதல்வர்.
அதன்படி சென்னை கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதோடு மட்டுமின்றி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். பொதுமக்களுக்கு கொடுக்க தயார் செய்து வைக்கப்பட்டிருந்த உணவை ருசித்து பார்த்தார் மு.க.ஸ்டாலின்.
உடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பல உயரதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் முதல்வர் அளித்த பேட்டியில், ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் பெற்றுள்ளனர், முறையாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என கூறினார். முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைப்பதில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளது. தற்போது சமாளித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.