• Thu. Dec 12th, 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் – பாமக எம்.எல்.ஏ

ByA.Tamilselvan

Apr 11, 2023

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
16வது சீசன் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள சீசனில் லக்னோ ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை தற்போது பிடித்துள்ளன. இனிவரும் காலங்களில் போட்டிகள் மேலும் விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை சார்பாக கோரிக்கை குறித்த விவாதங்கள் இன்று நடைபெற்றது. அதில், பேசிய தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
சிஎஸ்கேவை தமிழக அணி போல் விளம்பரம் செய்து மக்களிடம் லாபம் பெறுவதாக குற்றம்சாட்டிய அவர், தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரைக்கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை என்றார். தமிழர்களே இல்லாமல் தமிழக அணி போல விளம்பரம் செய்கின்றனர் என்று பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் பேசினார். எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழ்நாடு அரசு தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிஎஸ்கே வீரர்கள், சென்னையின் பிரதிநிதிகளாக விளையாடுகின்றனர். அதே போல் பல தமிழக வீரர்கள் மற்ற மாநில அணிகளில் விளையாடுகின்றனர். எனவே இதில் தடை செய்யும் அளவுக்கு எந்த விபரீதமும் இல்லை என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.