உலகிலேயே ஒரு சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கொண்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், சென்னை 3ம் இடத்தில் உள்ளது.
பாதுகாப்பிற்காக பொருத்தப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களால் பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக அடையாளம் காண முடிகிறது. அந்த வகையில், அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பொது இடங்களை கண்காணிப்பதில் அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை ‘போர்ப்ஸ் இந்தியா’ ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதாவது, ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட அதிகப்பட்ச கேமராக்களை அடிப்படையாக கொண்டு உலக அளவில் மிகுந்த கண்காணிப்பு நகர பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில், அதிக சிசிடிவி கேமராக்களை கொண்டுள்ளதாக டெல்லி முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு ஒரு சதுர மைல் பரப்பில் 1,827 கேமராக்கள் உள்ளன.
2வதாக சதுர மைலுக்கு 1,138 கேமராக்களுடன் லண்டன் 2வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சென்னை 3வது இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் சதுர மைலுக்கு 610 கேமராக்கள் உள்ளன. அந்த வகையில் 194 கேமராக்களுடன் நியூயார்க் 14வது இடத்திலும், 157 கேமராக்களுடன் மும்பை 18வது இடத்திலும் உள்ளன.
முன்னணி நகரங்களை பின்னுக்கு தள்ளி டெல்லி முதலிடத்தை பிடித்திருப்பது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டதாவது, சதுர மைலுக்கு அதிக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவியதில் ஷாங்காய், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களை பின்னுக்கு தள்ளியிருப்பது பெருமையளிக்கிறது என அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், உலக அளவில் 3வது இடத்தை பிடித்து சென்னை சாதனைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது.