• Sat. Apr 20th, 2024

கானல் நீராகும் சென்னை – ஐதராபாத் சார்மினார் தினசரி ரயில் சேவை..,கோரிக்கை வைக்கும் தென்மாவட்ட மக்கள்…

Byத.வளவன்

Oct 11, 2021

தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்துக்கு செல்ல தற்போது நேரடி தினசரி இரயில் வசதி இல்லை. திருநெல்வேலி, மதுரை மற்றும் திருச்சி போன்ற நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஐதராபாத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பணிகள் தொடர்பாக தினசரி ஐதராபாத்துக்கு சென்று வருகின்றனர். தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலிருந்து மதுரை, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகளுக்கும் நேரடி தினசரி ரயில் இல்லை. இதனால் சென்னை – ஐதராபாத் சார்மினார் தினசரி ரயிலை மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர் தென்மாவட்ட மக்கள்.
தற்போது தமிழக தென்மாவட்டங்களிலிருந்து ஐதராபாத்துக்கு செல்ல வேண்டுமனால் காலையில் சென்னை சென்று மாலையில் சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு செல்லும் இரயிலில் செல்ல வேண்டும். இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது. இதனால் தென் மாவட்ட பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
ஐதராபாத்துக்கு மட்டும் தினசரி ரயில் இல்லை:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை, மும்பை, பெங்களுர், மங்களுர், கோவை போன்ற நகரங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஐதராபாத்துக்கு மட்டும் வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. தற்போது நாகர்கோவிலிருந்து காச்சிகுடாவுக்கு வாராந்திர ரயில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதைப்போல் மதுரையிலிருந்து காச்சிகுடாவுக்கு வாராந்திர ரயிலும், ராமேஸ்வரத்திலிருந்து ஓக்காவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலும் காச்சிகுடா வழியாக இயக்கப்படுகிறது. அதே போல சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மூன்று தினசரி ரயில்களும், திருப்பதியிலிருந்து ஐதராபாத்துக்கு கணிசமான அளவு ரயில்களும் இயக்கப் படுகின்றன.
2008-ம் ஆண்டு திட்டம்:-
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு செகந்திராபாத்தை தலைமையிடமாக கொணட தென் மத்திய ரயில்வே கன்னியாகுமரியிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க 2008-ம் ஆண்டே முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கு கன்னியாகுமரியில் முனையவசதிகள் குறைவாக இருக்கின்ற காரணத்தை கூறி திருவனந்தபுரம் கோட்டம் மறுத்து விட்டதாகவும் கூறப் படுகிறது. இது மட்டுமல்லாமல் 2008-ம் ஆண்டு காச்சுகுடாவிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயில் இயக்க 2008-ம் ஆண்டு நடைபெற்ற ரயில் காலஅட்டவணை மாநாட்டில் வைத்து திட்ட கருத்துருவும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனாலும் தெற்கு ரயில்வே இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுக்கவில்லை.
ஒருவழிப்பாதையும் ஒரு காரணம்:
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள பாதை ஒரு வழிப் பாதையாக இருப்பதால் 2008-ம் ஆண்டு இந்த ரயில் இயக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து நிலவுகிறது. அடுத்த 2010-ம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர் ரோசையா ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து தங்கள் மாநில கோரிக்கையை சமர்ப்பித்த போது சென்னை – காச்சுகுடா ரயிலை திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையும் எந்த பதிலும் கிடைக்க வில்லை. ஆந்திராவை சார்ந்த எம்.பிக்கள் இந்த கோரிக்கையை 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் எழுப்பினர். இதற்கு அப்போது செங்கல்பட்டு – திண்டுக்கல் ரயில் பாதை ஒருவழிப் பாதையாக இருக்கின்ற காரணத்தால் ரயில் இயக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை – கன்னியாகுமரி இருவழிப் பாதை:-
சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி வழியாக மதுரை வரை உள்ள பாதை இருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பாதையில் புதிய ரயில்கள் அதிக அளவில் இயக்கலாம். இதைப்போல் மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரயில் பாதையும் இருவழிபாதையாக மாற்றும் பணிகள் விரைவாக நடந்தால் இந்த வருட இறுதியில் முடியலாம். இந்த இருவழிபாதை பணிகள் நிறைவுபெற்றால் எளிதாக இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க முடியும்.
திட்ட கருத்துரு:
தற்போது நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீண்டும் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென்மத்திய ரயில்வே மண்டலம் ஐதராபாத்திலிருந்து காசிபட், விஜயவாடா வழியாக சென்னை தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் தினசரி ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வெலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க கடந்த மாதம் நடந்த ரயில்வே கால அட்டவணை மாநாட்டில் ரயில்வே வாரியம் திட்ட கருத்துரு சமர்ப்பித்துள்ளது.
ரயில்வே வாரியத்தின் அனுமதி:
இந்த திட்ட கருத்துருவுக்கு தென்னக ரயில்வே மண்டலமும், திருவனந்தபுரம் கோட்டமும் அனுமதி அளிக்க வேண்டும். திருவனந்தபுரம் கோட்டம் தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் ரயில்களுக்கு எளிதாக அனுமதி அளிக்காது. இவ்வாறு அனுமதி அளித்த பிறகு மட்டுமே இந்த திட்டம் ரயில்வே வாரியத்தின் அனுமதிக்கு செல்லும். கடைசியாக ரயில்வே வாரியம் அனுமதி அளித்தால் மட்டுமே இந்த ரயில் நீட்டிப்பு கால அட்டவணையில் வெளியாகி பயணிகள் பயன்பாட்டுக்கு வரும்.
காலஅட்டவணை:
இதன்படி இந்த ரயில் ஐதராபாத்திலிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு மறுநாள் காலை 7:55 மணிக்கு வந்து விட்டு அங்கிருந்து உடனடியாக 8:00 மணிக்கு புறப்பட்டு அதே நாள் இரவு 8:00 மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். இதைப்போல் மறுமார்க்கமாக கன்னியாகுமரியிலிருந்து காலை 6:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு தாம்பரம் சென்றுவிட்டு அங்கிருந்து மாலை 6:10 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 7:50 மணிக்கு ஐதராபாத் சென்றடையுமாறு காலஅட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு பகல் நேர ரயில்:
இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்கும் போது சென்னைக்கு பகல் நேரத்தில் செல்ல இரண்டாவதாக ஓர் தினசரி ரயில் சேவை கிடைக்கும். இது மட்டுமல்லாமல் நமது மாநிலத்தில் உள்ள நெல்லை, மதுரை, திருச்சி பேன்ற இடங்களுக்கும் பகல் நேரத்தில் செல்ல ரயில் வசதியும் கிடைத்து விடும்.
எம்.பிகள் போராட வேண்டும்
குமரி எம்.பி இந்த ஐதராபாத் ரயில் நீட்டிப்புக்கு உடனடியாக ரயில்வே வாரியத்தில் உள்ள ரயில்கள் இயக்கம் அதிகாரிகள், ரயில்வே வாரிய தலைவர், ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) ஆகியோரை நேரடியாக சந்தித்து இந்த கோரிக்கைளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் மட்டுமே இந்த ரயில் நீட்டிப்பு கோரிக்கை நிறைவேறும். இவ்வாறு செய்யவில்லையேன்றால் இதற்கு முன்பு இது போன்ற பல்வேறு திட்ட கருத்துருக்கள் வந்து அனைத்தும் கிடப்பில் போடப்பட்டும், அனுமதி அளிக்காமலும் போனது போல இந்த ரயில் நீட்டிப்பு திட்டமும் கிடப்பில் போடப்பட்டு விடும். ரயில்வே வாரியத்துக்கு போதிய அழுத்தம் அல்லது அரசியல் நிர்ப்பந்தம் இல்லாத காரணத்தால் இன்றுவரை கன்னியாகுமரியிலிருந்து ஐதராபாத்துக்கு தினசரி ரயில்சேவை கானல் நீராகவே உள்ளது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் பகுதியை சார்ந்த பிஜேபி கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெலுங்கான மாநிலத்தின் கவர்னராக உள்ளார். அவர் தனது சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு ஐதராபாத்திலிருந்து தினசரி ரயில் சேவை இயக்க தென்மத்திய ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே வாரிய அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் எளிதாக இந்த ரயில் நீட்டிப்பு நடைபெறும். அத்தோடு தென் மாவட்ட எம்பிக்களும் பாராளுமன்றத்தில் பேசி நெருக்கடி கொடுத்தால் சென்னை – ஐதராபாத் சார்மினார் தினசரி ரயில் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கின்றனர் தென்மாவட்ட மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *