• Fri. Mar 29th, 2024

இந்த விஷயத்தில் சமரசம் செஞ்சிக்கவே முடியாது – தமிழக அரசுக்கு ஐகோர்ட் போட்ட ஆர்டர்!

High Court

உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்கள், பேப்பர்களை பிரிக்க எச்சிலையும், கவர்களை திறக்க ஊதவும் செய்வதால் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்திருந்தார். கொரோனா பரவல் காலத்தில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது எச்சில் அல்லது ஊதுவதால் அது உணவு பொருட்களில் பாதிப்பு ஏற்படும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் உணவு பொருட்களை கையாள்பவர்கள் எச்சில் தொட்டு பயன்படுத்தக்கூடது என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் அரசாணை பிறப்பிப்பது மட்டும் போதாது என்றும், அதுகுறித்து போதிய அளவில் விளம்பரம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அரசு நடவடிக்கை திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர். உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் ஆரோக்கியத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். மேலும் வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை உணர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உத்தரவிட்டனர்.

இதை செயல்படுத்துவதை முறைப்படுத்துவதற்காக உணவு பாதுகாப்பு அதிகாரியை நோடல் அதிகாரியாக நியமித்தும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியும் வழக்கை முடித்துவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *