சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை வரும் 9ஆம் தேதி மேயர் பிரியா தாக்கல் செய்கிறார்.
சென்னை மாநகராட்சியில் , 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் மேயர் , துணை மேயர் இல்லாததால் , அதிகாரிகள் தயாரித்த பட்ஜெட் நேரடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு வந்தது . ஆறு ஆண்டுக்கு பின் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தற்போது 200 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
அதன்படி , மறைமுக தேர்தலில் திமுக – வைச் சேர்ந்த பிரியா மேயராகவும் , மகேஷ்குமார் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . இதனால் , 6 ஆண்டுக்கு பின் , மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது .
மேயர் பிரியா பதவியேற்று முதல் பட்ஜெட் என்பதால் , மாநகராட்சி வளர்ச்சி , மக்களுக்கான புதிய அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . பட்ஜெட் வரும் ஏப்ரல் 9 ம் தேதி மாமன்றத்தில் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது .
மாநகராட்சி பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் வருவாயை பெருக்குவதற்கான ஆதாரங்கள் , மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிங்கார சென்னை திட்டம் , மழைநீர் வடிகால்வாய் போன்றவை முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது .
குறிப்பாக தரமான சாலைகள் , மழைநீர் வடிகால் , ஸ்மார்ட் சிட்டி போன்ற நகரை அழகுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன