இரட்டை இலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். 33 வயதான இவர் அமமுக பொதுச் செயலாளராக உள்ள டிடிவி தினகரனிடம் 2017ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர முடியும் என கூறியுள்ளார்.
அதற்காக லஞ்சமாக ரூ 50 கோடியை கேட்டதாக தெரிகிறது. தினகரன் அவரிடம் ரூ 2 கோடியை கொடுத்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் இதே வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை சிபிஐ கைது செய்தது. இதில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த சுகேஷ் மத்திய உள்துறை மற்றும் சட்ட அமைச்சக அதிகாரிகளுக்கு நெருக்கமானவர் என கூறி டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ 215 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து பண மோசடி புகாரின் பேரில் சுகேஷ் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலிவுட் நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் விலை உயர்ந்த பரிசுகளை இந்த பணத்தில் கொடுத்ததாக தெரிகிறது.
215 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சுகேஷின் காதலியான லீனா மரிய பாலையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த பண மோசடி குறித்து ஜாக்குலின், பதேஹியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் ஜாக்குலின் , சுகேஷுடன் நெருக்கமாக பழகியதில்லை என கூறியிருந்தார்.
ஆனால் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் பெற்றுத் தருவதாக கூறிய விவகாரத்தில் பண மோசடி தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது மேலும் ஒரு பண மோசடி வழக்கை அமலாக்கத் துறையினர் பதிவு செய்தனர். சிறையில் இருக்கும் அவரை நேற்று கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துகிறார்கள் அமலாக்கத் துறையினர்.