• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தாம்பரத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி..

ByPrabhu Sekar

Jun 29, 2026

சென்னை தாம்பரத்தில், காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கம் சார்பில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV) குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் மருத்துவர் உமையாள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவர் சங்கம், இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சென்னை கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாம்பரம் வள்ளுவர் குருகுலத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை இந்திய தடகள வீராங்கனை காயத்திரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பங்கேற்பாளர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சானடோரியம் வரை பேரணியாக சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் உமையாள், இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாக தெரிவித்தார்.

மேலும், இந்த நோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவதாகவும், 14 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கட்டாயம் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இளம் வயது ஆண்களும் இந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் வலியுறுத்தினார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை முற்றிலும் தடுப்பது விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் காலமுறை மருத்துவ பரிசோதனைகளின் மூலமே சாத்தியம் என்பதால், அனைவரும் “வரும்முன் காப்போம்” என்ற எண்ணத்துடன் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.