• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் தன்னார்வ ஆசிரியர்கள் 150 பேருக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா..,

Byமுகமதி

Oct 1, 2026

புதுக்கோட்டை இணையவழி கல்வி வானொலி குழுவின் முன்னெடுப்பில்
புதுகை பேரரசு ரோட்டரி சங்கம், கல்வி கண் திறந்த காமராஜர் அறக்கட்டளை மற்றும் பார்வதிஸ் ஜுவல்லரிஸ் சார்பில் புதுக்கோட்டை பார்வதிஸ் ஜுவல்லரிஸ் மினி ஹாலில் தன்னார்வ அசிரியர்கள் 150 பேருக்கு வழிகாட்டி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இணையவழிக் கல்வி வானொலி என்பது புதுக்கோட்டையில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் எளிய முறையில் கல்வி கற்கும் வகையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தன்னார்வக் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த தொழில்நுட்பத் தளமாகும்.

இத்தளத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகப் பகுதிகள், ‘எண்ணும் எழுத்தும்’ பாடல்கள், விடுகதைகள், திருக்குறள், கதைகள், பொது அறிவு மற்றும் நற்சிந்தனைக் கருத்துக்கள் ஆகியவை ஆடியோ வடிவில் வழங்கப்படுகின்றன.

இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் வாசித்தல் திறன் மற்றும் பேச்சாற்றலை மேம்படுத்திக் கொள்கின்றனர்.மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் கதைகள் அல்லது பாடல்களை குரல் பதிவு செய்து அனுப்புகின்றனர்..மாணவர்கள் அனுப்பிய குரல் பதிவுகள் இந்த வானொலியில் ஒளிபரப்பப்படுகின்றன.

இத்தகைய பணியில் புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மாணவர்களின் நலன் கருதி தன்னார்வமாக செயல்பட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பின் மூலம் அவ்வப்போது மாணவர்களின் கற்றலுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருட ஆசிரியர் தினத்திற்கான விருது வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில தன்னார்வ அமைப்புகளின் உதவி மற்றும் ஒத்துழைப்பால் புதுக்கோட்டையில் நடைபெற்றது.

விழாவிற்கு புதுக்கோட்டை பேரரசு ரோட்டரி சங்க தலைவர் சஞ்சய் பாலாஜி தலைமை தாங்கினார். புதுக்கோட்டை பேரரசு ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த நிறுவனர் முருகராஜ் மற்றும் செயலாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நடராஜன், கல்விக்கண் திறந்த காமராஜர் அறக்கட்டளையின் நிறுவனர் கணேஷ்குமார் , தன்னார்வலர் ரஞ்சனி, விரிவுரையாளர் கோபாலகிருஷ்ணன், தேசிய நல்லாசிரியர் தங்கம் மூர்த்தி , பாவேந்தர் மெட்ரிக்பள்ளி தாளாளர் காசிநாதன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சண்முகநாதன் மற்றும் இணையவழி கல்வி வானொலியின் ஒருங்கிணைப்பாளர் நல்லாசிரியர் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

நல்லாசிரியர் கலைவாணி ரவிச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார் .
ஆசிரியர் ஜானகிராமன் ஏற்புரை வழங்கினார்.

முடிவில் நல்லாசிரியர் உமாராணி நன்றி கூறினார்.

விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள 150 க்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.