சென்னையை அடுத்த பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் ‘VELS CHAMPIONS – 2026’ விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 50 பேர் கௌரவிக்கப்பட்டனர். மேலும், 15 வகையான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மொத்தம் ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட, ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் விஷால் டி.கே. பேசுகையில், “வேல்ஸ் பல்கலைக்கழகம் எனது வாழ்க்கையின் ஒரு அங்கம். ஒட்டப்பந்தயத்தில் எனது முந்தைய சாதனைகளை நானே முறியடிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. உங்களைப் போலவே நானும் விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தேன். இன்று அந்த இலக்கை அடைந்துள்ளேன். நாளை நீங்களும் இதுபோன்ற சாதனைகளைப் படைப்பீர்கள். கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை இருந்தால் எதையும் அடைய முடியும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமையுரையாற்றிய வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில், “விஷால் டி.கே.-வின் சாதனைகள் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்விக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் விளையாட்டுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, திண்டிவனத்தில் 260 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும், உபகரணங்களும் இடம்பெறும். மேலும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் விளையாட்டுத் துறைக்கெனத் தனிப் பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் குழுமங்களின் துணைத் தலைவர் டாக்டர் பிரித்தா கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் பாஸ்கரன், பதிவாளர் டாக்டர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.