மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் சேவைகள் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் நிலையில், நாள்தோறும் 1.50 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதோடு பழுதான கேமராக்களை நீக்கிவிட்டு புதிய கேமராக்கள் அமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. சுமார் 32 ரயில் நிலையங்களில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் சுமார் 80 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட இருக்கிறது. மேலும் சிசிடிவி பொருத்துவதற்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்பட்டு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.