• Thu. Mar 28th, 2024

செங்கோட்டையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்..!

Byவிஷா

May 1, 2023

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 600 மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மாம்பழம் விவசாயம் நடைபெறுகிறது. கோடைகால சீசனாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விளையும் மாம்பழங்கள் தற்போது கடைகளில் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளது. இங்கு சப்போட்டா, கிளி மூக்கு, பஞ்சவர்ணம், அல்போன்சா போன்ற ரக மாங்காய்கள் காய்க்கின்றன.
செங்கோட்டை மற்றும் சுற்று கிராமங்களில் விளையும் இந்த வகை மாங்காய்கள் வெளிமார்க்கெட் மற்றும் பழக்கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஆனால் சீசன் தொடங்கும் முன்னே சில வியாபாரிகள் அதிக லாபம் பார்க்கும் நோக்கில் மாங்காய்களை குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடை மற்றும் குடோன்களில் குவியலாக வைத்து அதனை கார்பைட் கல் மூலம் பழுக்க வைப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இவ்வாறு பழுக்கும் பழங்களின் தோல் பகுதி பளபளப்பாக இருக்கும். இது பார்ப்பவர்களை வாங்க தூண்டும். இதேபோல் குவியலாக மாங்காய்களை போட்டு, ஸ்பிரே மூலம் ரசாயன மருந்து அடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கல், ரசாயனம் மூலம் காய்கள் சில நாள்களில் பழுக்கின்றன. இந்த பழங்களை சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும். செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிக்கின்றனர். இதை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து செங்கோட்டையில் பல கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வல்லம் அருகே உள்ள சிலுவைமுக்கு பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைத்துள்ளதாக தகவல் அறிந்து தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, அவர் யார் என்று தெரியாமல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கண் முன்னே மாம்பழங்கள் கெடாமல் இருப்பதற்காகவும், விரைவாக பழுக்கவும் அமிலம் கலந்த ஸ்பிரேவை வியாபாரி மாம்பழங்களில் அடித்துக் கொண்டிருந்துள்ளார்.
அதை பார்த்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி குடோனில் வைத்திருந்த மாம்பழங்களை ஆய்வு செய்தார். அப்போது, குடோனில் இருந்த மாம்பழங்கள் முழுவதும் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப் பட்ட மாம்பழங்களாக இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த குடோனில் இருந்த சுமார் 600 கிலோ மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்து அதை போலீஸ் பாதுகாப்புடன் அருகே உள்ள குப்பை கிடங்கில் கொட்டி அழித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *