தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது..,
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் முன்னெடுத்து வருகிறது. சமீபத்தில் கூட தெலுங்கானா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது. அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதால் தற்போது தமிழகத்திலும் அரசியல் கட்சி தலைவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலுங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில் கூட்டணியில் இருக்கும் திமுக ஏன் தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று பல அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதற்கான பணிகளை அரசாங்கம் தொடங்கிவிட்டதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவி வரும் நிலையில் தற்போது தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதாகவும் ஆனால் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல்கள் முற்றிலும் வதந்தி என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு தனியாக குழு எதுவும் அமைக்கப்படவில்லை எனவும் இதுவரை அரசாங்கம் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.