தேர்தல் விதிகளை மீறியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை(பிப்ரவரி 5) ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்துள்ளது. ஆனாலும் தேர்தல் விதிமீறல்களை டெல்லி காவல்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்த நிலையில் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி முதல்வருமான ஆதிஷி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நேற்று நேற்று இரவு கோவிந்தபுரி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் முதல்வர் ஆதிஷியும், அவரது ஆதரவாளர்கள் 70 பேரும் சென்றதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களைக் கலைந்து செல்லுமாறு வலியுறுத்திய காவல் துறையினரை ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக டெல்லி முதல்வர் ஆதிஷி மீதும், காவல் துறையினரைத் தாக்கியதாக ஆம் ஆத்மியினர் மீதும் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.