அதிமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலவரம் தொடர்பாக ஓபிஎஸ்,இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் இருந்தனர். மோதல் சம்பவத்தையடுத்து கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அளித்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பாக நடந்த கலவரம் தொடர்பாக 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.