• Sat. Apr 20th, 2024

கஞ்சா விற்பனை -ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

ByA.Tamilselvan

Jun 29, 2022

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 170 கிலோ கஞ்சா பறிமுதல். குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை முடக்கியது.
தென்தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வந்த கஞ்சா மற்றும் போதை விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தென்மண்டல காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்களது சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளும் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுரை ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வீட்டிற்குள் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 170 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக காளை மற்றும்‌ பெருமாயி என்ற கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி சுப்பையா என்பவரும் தற்போது புழல் சிறையில் உள்ளார். இவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போதை பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா விற்கும் தொழில் செய்து அதில் ஈட்டிய பணத்தையும், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளையும் அவரது உறவினர்கள் பெயரில் ஈட்டிய சொத்துக்களையும் பறிமுதல் செய்யலாம் என்ற சட்டத்தின் அடிப்படையில் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டு, சொத்து விபரங்கள் கணக்கில் எடுக்கப்பட்டன. சுமார் 5 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டன.
இதனையடுத்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கஞ்சா தொழில் செய்வது சட்டப்படி குற்றம் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது சமூகத்தின் சீர்கேடாகும். மேற்படி கஞ்சா தொழில் செய்பவர்கள் மற்றும் அவர்கள் உறவினர்களின் சொத்துக்களை முற்றிலுமாக முடக்க கடுமையான நடவடிக்கை காவல்துறையின் மூலம் எடுக்கப்படும்.
மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றம் சில்லரை வியாபாரிகள் அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் கடத்துபவர்கள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்களின் சொத்துக்கள் அனைத்தும் சட்டப்படி முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *