• Sat. Apr 20th, 2024

என்னை ‘சின்னவர்’ என்று அழையுங்கள்: உதயநிதி ஸ்டாலின்..!

Byவிஷா

Jun 27, 2022

கழக உடன்பிறப்புகள் என்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைக்காமல், சின்னவர் என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று சீனியர் அமைச்சர்கள் பலரும் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்து வரும் நிலையில், புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உசிலங்குளம் தடி கொண்ட அய்யனார் திடலில் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா, தொண்டரை போற்றுவோம் என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசியதாவது..,
“தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக தி.மு.க. உள்ளது. தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது கிடையாது. கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.
என்னைப் பாராட்டிப் பேசுகின்றவர்கள் என் மீது அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும்போது, மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் இப்படியெல்லாம் அழைக்கின்றீர்கள். அப்படி அழைப்பதில் எனக்கு துளிகூட விருப்பம் கிடையாது. கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர்தான். கலைஞருக்கு நிகர் அவர் மட்டும்தான். இரண்டாம் கலைஞர், மூன்றாம் கலைஞர், நான்காம் கலைஞர் என்று தயவு செய்து யாரையும் அழைக்காதீர்கள். சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான். ஏனென்றால், இங்கே இருக்கின்ற பெரியவர்களோடு ஒப்பீடு செய்து பார்க்கும்போது, அவர்களுடைய உழைப்பில் நான் மிகமிகச் சின்னவன். அதனால், என்னை சின்னவர் என்றே கூப்பிடுங்கள்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *