திய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் முறையில் காப்பீடு பதிவு செய்வதை கட்டாயமாக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக உடனடியாக சுற்றறிக்கையை விரைந்து பிறப்பித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
சாலை விபத்து மரணத்தில் இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து போக்குவரத்து துறை சார்பிலும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பொதுக் காப்பீட்டு மன்றம் (GIC) சார்பில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு மெமோ ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் தயாராகி வரும் அதே நேரத்தில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) விநியோகஸ்தர்களாக மட்டுமே காப்பீடு நிறுவனம் செயல்படுவதால், ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் நிறுவனங்களால் சேவைகளில் எந்த மாற்றமும் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆணையத்தின் ஒப்புதல் பெற்று,
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டுமென கேட்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்ற நீதிபதி, பொதுக் காப்பீட்டு மன்றம், காப்பீடு ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை இணை ஆணையர் ஆகியோரை வழக்கில் சேர்த்ததுடன், வழக்கில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேசமயம், செப்டம்பர் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான கட்டாய வாகன காப்பீடு உத்தரவை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
கட்டாய காப்பீடு உத்தரவை ஆகஸ்ட் 25ஆம் தேதி பிறப்பித்தவுடன், துரித கதியில் செயல்பட்டு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசை நீதிபதி வைத்தியநாதன் தனது உத்தரவில் பாராட்டி உள்ளதுடன், வாகன ஓட்டிகள், பயணிப்பவர் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு அரசு செயல்படுவதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.