

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இனி 1ம் முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தனது தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி சட்டப்பேரவையில் 5 புதிய திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்த அவர், நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் காலையில் பள்ளி செல்லும் போது காலை உணவை சாப்பிடுவதில்லை என்ற தகவல் கிடைத்ததை அடுத்து இந்த புதிய திட்டத்தை கொண்டு வர முடிவெடுத்ததாகக் கூறினார். இந்த திட்டம், முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பின்னர் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்க்கும் நோக்கில், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து தேவையான மருத்துவ உதவியும், போதிய ஊட்டச்சத்து கிடைப்பத்றகான உதவியும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதன்மூலம், ஊட்டச்சத்து குறைபாடில்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் ( School Of Excellence ) உருவாக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதற்கட்டமாக ரூ.150 கோடியில் அரசுப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக மேம்படுத்தப்படும் என்றார். இதன்மூலம், மாணவர்களின் பல்வகை திறன்கள் வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரூ.180.45 கோடி செலவில் சொந்தகட்டடங்கள் கட்டி நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் செயல்படுத்தப்படும் என்றும், இதன்மூலம், காலை, மாலை என இருவேளைகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மருத்து சேவை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவித்த மு.க. ஸ்டாலின், இதற்காக முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். இந்த திட்டம் தனது நேரடி கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் என்றும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளும் பாரபட்சம் இன்றி இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்த ஓராண்டு காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்றும், வேகமாக செல்ல முடியாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும், ஒன்றிய அரசின் சில செயல்பாடுகளுமே காரணம் என்றும் குறிப்பிட்டார்.
தடைகளைத் தகர்ந்து வெற்றிபெற வேண்டும் என்ற நேர்மறையான சிந்தனை கொண்டவன் தான் என்றும், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றிகாட்டுவோம் என்றும் அவர் கூறினார்.
முதலாம் ஆண்டு முத்தான தொடக்கத்தை அளித்த ஆண்டாக இருந்ததாகத் தெரிவித்த மு.க. ஸ்டாலின், 2-ம் ஆண்டு இணையற்ற ஆண்டாக இருக்கப்போகிறது என்றும், இனி எந்நாளும் திமுக ஆட்சிதான் என்றும் குறிப்பிட்டார்.
