சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் விளைநிலத்தில் தண்ணீர் வெளியேற தோண்டிய குழியில் உறைகிணறு கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறையும், கடைசி 4 கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறையும் மேற்கொண்டன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வந்த 7-ம் கட்ட அகழாய்வு செப்.30-ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 7ம் கட்ட அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஏராளமான உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. இதன்மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அறுவடை பணிக்காக தண்ணீரை வெளியேற்ற 7 அடி ஆழத்தில் விவசாயிகள் குழி அமைத்தனர். அந்த குழியில் உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் உத்தரவில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு குழியை தோண்டி உறைகிணற்றின் உயரத்தை அறிய தொல்லியல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.