• Mon. Apr 21st, 2025

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்… இந்தியா கூட்டணியினர் கைது

ByP.Kavitha Kumar

Jan 27, 2025

சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டிய இந்திய கூட்டணியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற, சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க இன்று காலை சிதம்பரம் வருகை தந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகே, இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார். அக்கட்சியின், மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் குமரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் மக்கின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ் ஒளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், சுவாமி சகஜானந்தாவின் கொள்கைகளைக் களவாட நினைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீசஸார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் சிதம்பரத்தில் பரபரப்பு நிலவியது.