ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானியை, வயநாட்டில் தற்போதே பாஜக களமிறக்கி உள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டவர் ஸ்மிருதி இரானி. இந்நிலையில் இந்தத் தேர்தலில் அவர் படுதோல்வி அடைந்தார். அதே சமயம், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஆட்சியை இழந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து அமேதி தொகுதியில் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த துணை புரிந்து மக்களின் பேராதரவுடன், ராகுல் காந்தியை, ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இதனையடுத்து அங்கு வெற்றி வாய்ப்பை இழந்த ராகுல் காந்தி, அதன் பின் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில் ஸ்மிருதி இரானி வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டு வந்தார். இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான வயநாட்டில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நடைபெற உள்ள, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு, பாஜக தற்போதே தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில், அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானியை, வயநாட்டில் தற்போதே பாஜக களமிறக்கி உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை வயநாட்டில் களமிறங்கி இருப்பதன் மூலம், வரும் மக்களவைத் தேர்தலுக்கான புதிய வியூகத்தை பாஜக தொடங்கி, ராகுல் காந்திக்கு செக் வைக்கும் நோக்கில் பாஜக இந்த நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.