பாஜகவினர் வாய் கிழிய பேசுகின்றனர், ஆனால் செயலில் ஒன்றும் இல்லை என்று
அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் தலைவர் பால்ராஜ் தலைமையில் சொத்தவிளையில் நடந்தது. முன்னாள் அமைச்சரும், தொமுச பொது செயலாளர் சிவன் பிள்ளை, பொருளாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் லிவிங்க்ஸ்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான என். சுரேஷ்ராஜன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொமுச உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிதி ஆதாரத்தை சீரழித்து விட்டனர். இவற்றை சரி செய்யும் நடவடிக்கையில் முதல்வர் இறங்கி உள்ளார். ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள், மக்கள் சேவைக்காக இருக்க வேண்டும். நாகர்கோவில் மண்டல போக்குவரத்து கழகத்தில் இருந்து மட்டும் மாதம் ரூ.3.50 கோடி டோல்கேட் கட்டணமாக ஒன்றிய அரசுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் வாய் கிழிய பேசுகின்றனர். மக்கள் பணத்தை எப்படியெல்லாம் மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு பறிக்கிறது என்பதை விளக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஏழைகளுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 5 சவரன் நகை கடன் தள்ளுபடி திட்டம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட புள்ளி விபரம் ரூ.11 ஆயிரம் கோடி என இருந்தது. ஏழை மக்களுக்கு இவ்வளவு கடன் கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்த முதல்வர், இது பற்றி மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவ்வாறு நடந்த ஆய்வில், கடன் தள்ளுபடி ரூ.5900 கோடி தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.