• Mon. Jan 20th, 2025

அடுத்தடுத்து வெளிநடப்பு… சட்டப்பேரவையை புறக்கணித்த பாஜக,பாமக எம்எல்ஏக்கள்!

ByIyamadurai

Jan 6, 2025

அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாஜக மற்றும் பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2025-ம் ஆண்டிற்கான முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரையுடன் கூட்டத்தைத் துவக்கி வைக்க வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் தேசிய கீதம் பாடப்படாததால் ஆளுநர் சட்டமன்றத்தை உடனடியாக வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, பாமக உறுப்பினர் ஜி.கே மணி மற்றும் பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமின்றி அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்பின் பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புத்தாண்டில் ஆளுநர் உரையோடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருந்தது. இதில், பாட்டாளி மக்கள் கட்சி வெளிநடப்பு செய்திருக்கிறோம். இதற்குக் காரணம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமையைக் கண்டித்து அரசு சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அதை கண்டித்து அரசியல் கட்சிகள் ஜனநாயக ரீதியாகப் போராடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், இதற்கு அனுமதி அரசு வழங்க மறுக்கிறது. பேசுவதற்கும், போராடுவதற்கும் அனுமதி இல்லை. இப்படி அனுமதி மறுக்கப்பட்டுப் போராடியவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அதனால் பாமக சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்றார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வெளிநடப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் கொடூரத்தை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இரவு நேரத்தில் இந்த குற்றம் நடந்துள்ளது. அந்த குற்றவாளி ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர். அந்த குற்றவாளி மீது ஏற்கெனவே 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கக்கூடிய சூழலில் அவர் மீது நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. தமிழக அரசு இதை கண்டு கொள்ளவும் இல்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உலகம் முழுவதும் கேட்கக்கூடிய ஒரே கேள்வி யார் அந்த சார்? என்ற கேள்விதான்.

எனவே, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை யார் நடத்துகிறார்கள்? அரசாங்கம் தான் அனைத்திற்கும் காரணம். சட்டம் ஒழுங்கு சரியில்லை. மேலும், சட்டப்பேரவைக்குள் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த உடனே தேசிய கீதம் படிக்க வேண்டும். அதைப் படிப்பதற்கு முன்பே சட்ட விதிகளைப் பின்பற்றாமல், ஆளுநரை முற்றுகையிட்டு உரையைப் படிக்க விடாமல் செய்ததால், உடனே அவர் கிளம்பிவிட்டார்” எனத் தெரிவித்தார்.