மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் ஜனவரி 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டையொட்டி பிரம்மாண்டமான செம்படைப் பேரணி நடைபெற்றது. மேலும் மாநாட்டில் மத்திய பாஜக அரசு மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாசிச அரசியலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 80 பேர் கொண்ட மாநில நிர்வாகக் குழு கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தின் விவாதத்தை தொடர்ந்து பெ.சண்முகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மேலும் உ. வாசுகி, என். குணசேகரன், க. கனகராஜ், பெ.சண்முகம், மதுக்கூர் ராமலிங்கம், சு.வெங்கடேசன், கே.பாலபாரதி, ஜி.சுகுமாறன், கே.சாமுவேல்ராஜ், எஸ்.கண்ணன், என்.பாண்டி, டி.ரவீந்திரன்,செ.முத்துக்கண்ணன், கே.அர்ச்சுணன், க..சுவாமிநாதன் ஆகிய 15 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பெ.சண்முகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்” என்று விஜய் குறிப்பிட்டிருந்தார்.