பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் குஜராத் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பா.ஜனதா நாடாளுமன்ற கட்சிக்கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், கட்சியின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, குஜராத் வெற்றிக்காக மாநில கட்சியினரை குறிப்பாக தலைவர் சி.ஆர்.பாட்டீலை வெகுவாக பாரட்டினார். அமைப்பு ரீதியாக கட்சி வலுவாக இருந்தால் வெற்றி பெற முடியும் என்பதற்கு குஜராத் கட்சிப்பிரிவு ஒரு உதாரணம் எனக்கூறினார். இதைப்போல கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் பிரதமர் மோடி புகழ்ந்துரைத்தார். ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருவதை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, இது தொடர்பாக நாடு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளில் மக்களை பங்கேற்க வைப்பதற்கு புதுமையான யோசனைகளை வழங்குமாறு எம்.பி.க்களையும் கேட்டுக் கொண்டார்.