• Thu. Sep 19th, 2024

வட கிழக்கு மாநிலங்களை
மத்திய அரசு புறக்கணிக்கிறது
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தலை சந்திக்க உள்ள மேகாலயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு தலைநகர் ஷில்லாங்கில் நேற்று அவர் தனது கட்சி மாநாட்டில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மேகாலயா மாநிலம், இந்த மண்ணின் மைந்தர்களால் ஆளப்படுவதை உறுதி செய்வதற்கு எங்கள் கட்சி மேகாலயா மக்களுக்கு உதவ விரும்புகிறது. மேகாலயாவையும், வட கிழக்கு மாநிலங்களையும் மத்திய அரசு மொத்தமாக புறக்கணித்து விட்டது. நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவோம், இந்த மாநிலம் வளம் பெறும் என நாங்கள் உறுதி அளிக்கிறோம். மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு தலா ரூ.1,000 மாதம்தோறும் அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். மேகாலயா மக்கள் கஷ்டப்பட்டது போதும். அவர்களை மாநில அரசு புறக்கணிக்கிறபோது, நாங்கள் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளோம் என்று அவர் கூறினார். முன்னதாக அசாம்-மேகாலயா எல்லை மோதலில் கடந்த மாதம் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மம்தா பானர்ஜி தலா ரூ.5 லட்சம் வழங்கினார். இதையொட்டி அவர் பேசுகையில், முக்ரோ துபபாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களை நான் சந்தித்தேன். அவர்களது துக்கத்தில் நான் அவர்களோடு இருப்பது எனது கடமை. ஒரு சிறிய உதவியாக நான் அவர்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை கருணைத்தொகையாக வழங்கினேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *