



தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா கர்நாடக முதல்வர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து போடியில் பாஜகவினர் தங்களது வீடுகளுக்கு முன்பாக கருப்பு கொடி கையில் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் தொகுதி மறு சீரமைப்பிற்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்திற்கு கேரள முதல்வர் பிரனாய் விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மற்றும் பல்வேறு மாநிலத்தில் இருந்து முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாரதி ஜனதா கட்சியினர் தமிழகத்திற்கு காவிரியில் மேகதாது அணை கட்ட முயற்சிக்கும், தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக முதல்வரையும், முல்லைப் பெரியார் அணை பராமரிப்பு மற்றும் நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு தடைகளை விதிக்கும் கேரள முதல்வர் பிரனாய் விஜயனை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும். தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாஜக கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடியில் தேனி மாவட்ட முன்னாள் தலைவர் பிசி.பாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட பாரதி ஜனதா கட்சியினர்களின் வீடுகளுக்கு முன்பாக கருப்புக் கொடி மற்றும் எதிர்ப்பு பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு கேரள மற்றும் கர்நாடக அரசிடம் இருந்து தண்ணீர் பெற்று தராமல் தமிழக மக்களை டாஸ்மாக் என்னும் மதுபான தண்ணீரில் மிதக்க விடுவதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

