கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணனிடம் கோவில்பட்டி நகர தலைவர் பாலசுப்பிரமணியன் மனு ஒன்று அளித்துள்ளார்.
அந்த மனுவில் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் லெனின் நகரின் கிழ மேற்குத் தெருவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. தற்போது எட்டையபுரம் சாலையில் செண்பகவல்லியம்மன் கோவில் அருகே பால வேலை நடைபெற்று வருவதால், அரசு சார்பில் சரியான மாற்று பாதை ஏற்பாடு செய்யாத காரணத்தினால் வாகனங்கள் இக்கோவில் பகுதி இருக்கும் சிறு தெரு வழியாக செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மற்ற காலங்களில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும்தான் இந்த தெருவினை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இந்த கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி சிலர் மனு கொடுத்துள்ளனர். மத வழிபாட்டை தடுக்கும் விதமாகவும், மத மோதலை தூண்டும் விதமாகவும் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கோவிலை எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்த கூடாது. இக் கோவிலை அகற்ற வலியுறுத்தி சிலர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். அவ்வாறு நடைபெற்றால் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் செய்வோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.