• Wed. Dec 11th, 2024

மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!

Byவிஷா

Mar 25, 2023

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வண்டிப்பாளையம், கூனிமேடு, கொழுவாரி, காளியாங்குப்பம், தேவிகுளம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு மத்தியில் 15,000 ஏக்கரில் 72 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதியாக கழுவெளி எனப்படும் பக்கிங்காம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மரக்காணத்தில் ஆரம்பித்து சென்னை வழியாக பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆந்திராவில் உள்ள காக்கிநாடா பகுதியில் முடிவடைகிறது.
இந்நிலையில், மரக்காணம் பகுதியில் இந்த சதுப்பு நிலப்பகுதியை சுற்றி ஏரி, குளம் உள்ளிட்ட சுமார் 220 நீர் நிலைகள் உள்ளன. இந்த கழுவெளி பகுதியில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால், இதில் அதிகளவில் மீன்கள், நண்டு, இறால் போன்றவையும் வளர்கின்றன. இந்த கழுவெளி பகுதியில் நிறைந்திருக்கும் தண்ணீரால் கடல் நீரும், கடல் உட்பும் புகாதவாறு பாதுகாக்கப்படுகிறது. இதனால், இப்பகுதியில் விவசாயமும் செழிப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு இயற்கையாக அமைந்துள்ள கழுவெளி மற்றும் நீர் நிலைகளை தேடி சீனா, இலங்கை, பாகிஸ்தான், ரஷியா போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள பறைவைகளான கூழக்கடா, அறுவான் மூக்கன், செந்நாரை, பாம்பு கழுத்து நாரை, சாம்பல் நாரை உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் இங்கு வருகின்றன.
இந்த பறவைகள் இங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கமும் செய்கின்றன. இவை பருவ நிலை மாறியவுடன் மீண்டும் தங்களது நாடுகளுக்கு சென்று விடும். இங்கு வந்து குவியும் பறவைகளை பாதுகாக்க பறவைகள் சரணாலயம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் மரக்காணத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணம் கழுவெளி சதுப்பு நிலம் பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, வலசைப் பறவைகள் வந்து செல்லும் மரக்காணம் கழுவெளி சதுப்பு நிலப்பகுதி தமிழ்நாட்டின் 16-வது பறவைகள் சரணாலயமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மரக்காணம் பறவைகள் சரணாலயம் தற்போது தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில், பறவைகள் சரணாலயம் பன்னாட்டு பறவைகள் மையமாக ரூபாய் 25 கோடியில் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.