• Sat. Apr 27th, 2024

பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’

Byவிஷா

Mar 25, 2023

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், வெளிப்பிரகாரத்தில் கூலிங் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா, விசேஷம், விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரம் வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
பங்குனி உத்திர திருவிழா என்பது கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். 10 நாட்கள் திருவிழா நடைபெற்று முடிந்தாலும், அதன்பிறகும் பக்தர்கள் தொடர்ச்சியாக தீர்த்தக்காவடி எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பெரும்பாலும் படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு சென்று கோவில் வெளிபிரகாரத்தை சுற்றி வந்து வழிபடுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பழனி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பகல் வேளையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சில நாட்களுக்கு முன்பு வடக்கு, மேற்கு வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காப்பதற்காக வெளிப்பிரகாரத்தில் உள்ள தரை பகுதியில் “கூலிங் பெயிண்ட்” அடிக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் கயிற்றால் ஆன விரிப்பு விரிக்கப்படுவதால் வெயிலின் தாக்கத்தை இன்னும் தணிக்க முடியும் என கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *