இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். அவர் பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நூல் ஒன்றின் முன்னுரையில் அம்பேத்காரின் கனவை நனவாக்குபவர் மோடி என இளையராஜா கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையி்ல நேற்று சென்னை காரம்பாக்கத்தில், துப்புரவு பணியாளர்களுடனான சமபந்தி விருந்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் என்று கூறினார். இளையராஜாவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
தனது டூவிட்டர் பக்கத்தில் ..அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். நான் ஒரு கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் என்று யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், நானும் கருப்பு தமிழன் தான், கருப்பு திராவிடன் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2019ம் ஆண்டு ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவோடு இணக்கமாக இருந்த காரணத்தினாலேயே அவருக்கு விருது கிடைத்தாக அப்போது பேசப்பட்டது. தற்போது மோடியை புகழ்ந்ததற்காக இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.