



தனக்கு கொத்தடிமையாக இருக்க மறுப்பதால், தன்னையும் தன் குடும்பத்தை பழிவாங்குவதற்காக தன் வீட்டை இடிக்க முயற்சி செய்கிறார். பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, எனவே நேர்மையான அதிகாரிகள் வைத்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என மிக நீண்ட புகாரை பாதிக்கப்பட்ட வினோத்குமார் என்பவர் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங்கிடம் கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டதாக கூறும் வினோத் குமாரை தொடர்பு கொண்டோம்..,

“சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியும், நானும் எனது சகோதரர் வழக்கறிஞர் கண்ணதாசன் என்பவரும் ஆரம்பத்தில் ஒன்றாகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியில் இருந்தோம். அவருக்கு தேர்தலில் சேர்மன் சீட்டு கிடைத்தபோது கூட, அவரை வெற்றி பெற வைக்க எங்கள் குடும்பமே உழைத்தோம். அவருக்காக நான் ஒரு முகநூல் பக்கமே உருவாக்கி அதற்கு அட்மினாகவும் இருந்தேன். தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன்பிறகு அவரது நடவடிக்கையை மாறத் தொடங்கியது. இந்நிலையில் தான் கடந்த 2022ம் ஆண்டு சேர்மன் மிதுன்சக்கரவர்த்தி அனுமதியோடு பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் எனக்கு வீடு கட்ட கட்டிட உரிமம் எண்:12/2022-2023 எண்ணின் அடிப்படையில் அடித்தளம் முதல் இறுதி கட்ட கட்டிட முடிவு வரை பரிசோதித்து கட்டிட அனுமதி வழங்கினார்கள். நானும் வீடு கட்டினேன்.



இந்த நிலையில் தான் சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மீது அடுக்கடுக்காக புகார்கள் வரத் தொடங்கியது. உடனே தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக கட்சியிலிருந்து திமுகவிற்குச் சென்றார். ஆனால் இவரது வண்டவாளங்கள் அனைத்தும் தெரிந்ததால் திமுகவில் அவரை ஏற்கவில்லை. உடனே திமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரசுக்கு போனார். இதனால் நாங்கள் அவரை விட்டு விலக ஆரம்பித்தோம். இதைத்தொடர்ந்து என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் தான் சார்ந்திருக்கும் கட்சியில் இணையுமாறும், அவருக்கு ஐடி விங் உருவாக்கி அடிமையாக இருந்து செயல்படுமாறும் எங்களை வற்புறுத்தினார். நாங்கள் மறுத்த போது எங்களை தரக்குறைவாக பேசினார். பின் என் சகோதரர் கண்ணதாசன் என் வீட்டு அருகில் வீடு கட்ட ஆன்லைனில் SWP/BPA/0018327/2023 என்ற எண்ணில் விண்ணப்பித்த கட்டிட வரைபட அனுமதியை காரணம் இல்லாமல் ரத்து செய்து விட்டு, நான் தலைவராக இருக்கும் வரை தர முடியாது என மிரட்டி அனுப்பினார்.

இது தொடர்பாக நான் அதிகாரிகளிடம் புகார் அளித்த போது,
பேரூராட்சி சட்ட விதிகள் துளியும் பின்னப்பற்றாமலும் நேரில் வந்து எந்த ஒரு கள ஆய்வும் மேற்கொள்ளாமலும், தபால் மூலம் அனுப்பாமலும் 10 நபர்களை வைத்து, நான் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக என் வீட்டில் நோட்டிஸ் ஒட்டினார்கள். எங்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களே கொடுத்த அனுமதி இப்போது சரி இல்லை என்கிறார்கள். மேலும் அந்த நோட்டீஸ்-க்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்கள். சேர்மன் மிதுன் சக்ரவர்த்திக்கு நாங்கள் கொத்தடிமையாக அடங்கிப் போகாததால், தன்னிச்சையாக (SUO MOTO) பேரூராட்சி பணியாளர்களை வைத்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 5000 வீடுகளில் என் வீடு மட்டும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொய் புகார் உருவாக்கி இருக்கிறார்கள். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த சுகதேவ் தெரு பொது குழாயை நாங்கள் குடிநீருக்காக பயன்படுத்துவதால் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி தூண்டுதல் பேரில் நேற்று முன்தினம் இணைப்பை தூண்டித்து உள்ளனர். இதுகுறித்து அனைத்து உண்மைகளையும் தெரிந்த அதிகாரிகள் சேர்மன் மிதுன் சக்கரவர்த்திக்கு பயந்து (மண்டல பேரூராட்சி துணை இயக்குனர் முதல் பேரூராட்சி செயல் அலுவலர் வரை) எனது புகார்களை கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட கலெக்டர் அவர்கள் இதில் நேரடியாக தலையிட்டு, நேர்மையான அதிகாரி மூலம் முறையான விசாரணை செய்து எனது வீட்டையும், எங்களையும் பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் என்றார்.

பழனிசெட்டிபட்டியின் பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி
இவரது புகார் குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெர்சி ரோஸி அன்பு ராணிடம் விளக்கம் கேட்க முயன்றோம். இதைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டியின் பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியும் தொடர்பு கொண்டு பேச முயன்றோம் எங்களது அழைப்பு எடுக்க மறுத்ததால் அவர்களுடைய தரப்பை பதிவு செய்யவில்லை.
தேனி மாவட்டத்திற்கு புதிதாக வந்த கலெக்டர் நேர்மையானவர் என்ற பெயர் பெற்றவர். இந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

