



தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உள்மஞ்சள், வெளி மஞ்சள் வகை தர்பூசனிக்கு மவுசு அதிகரித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலில் தகூதிலிருந்து இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் தற்போது குளிர்ச்சியான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதில் தர்பூசணி, நுங்கு, கரும்புச்சாறு மற்றும் இயற்கை பழச்சாறுகளை அதிக அளவில் உட்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே வெயில் காலம் என்றாலே தர்பூசணிக்கு தனி மவுசு உள்ளது. இதற்காக தமிழக முழுவதும் ஆங்காங்கே சாலையோரங்களில் கடைகள் அமைத்து தர்பூசணி விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டம் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தற்போது தர்பூசணி பழத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக புதிதாக வரக்கூடிய விஷாலா மற்றும் ஆரோக்கிய என்ற இரு வகை தர்பூசணி பழங்களுக்கு இப்பகுதியில் மவுசு அதிகரித்துள்ளது.

விஷாலா என்ற தர்பூசணி வகையில் வெளியே மஞ்சள் நிறத்திலும் உள்ளே ரோஸ் கலர் நிறத்திலும் பழம் காணப்படுகிறது, அதேபோன்று ஆரோக்யா என்ற வகை தர்பூசணி பழத்தில் வெளியே கரும்பச்சை நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் பழம் காணப்படுவதால் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.
இவ்வகை பழங்கள் அதிக சுவை கொண்டதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரி வரியாக காணப்படும் நாம்தாரி வகை தர்பூசணி பழம் வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கிலோ ரூபாய் 15 கும் சில்லறை விற்பனையில் ரூபாய் 20 க்கும், விஷாலா மற்றும் ஆரோக்கிய வகை தர்பூசணி பழங்களின் விலை மொத்தமாக கிலோ 15 ரூபாய்க்கும், சில்லறையாக கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உத்தமபாளையம் கூடலூர் சின்னமனூர் போன்ற பகுதிகளுக்கும், அண்டை மாநிலமான கேரளாவிற்கும் அதிக அளவில் தர்பூசணி பழங்கள் இங்கிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

