

தேனியில் தனியார் விடுதியில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், தேனி வாழை தொகுப்பு வளர்ச்சி திட்ட கருத்தரங்கு, கலெக்டர் முரளீதரன் தலைமையில் நடந்தது. தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குனர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில் அனைத்து வகையான பழங்கள், காய்கறிகள், பூக்கள், மலைத் தோட்டப் பயிர்கள், வாசனை பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்கள் என, சுமார் 61,804 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக இம்மாவட்டத்தில் வாழை பயிர் அனைத்து வட்டாரங்களிலும் சுமார் 6,300 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
இங்கு கிராண்ட் நைன், செவ்வாழை, நேந்திரன், கற்பூரவள்ளி, நாழி பூவன், ரஸ்தாளி மற்றும் நாடு போன்ற ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திசு வாழை கன்றுகள் நடவு, சொட்டு நீர் பாசனம் மூலம் 1 ஏக்கருக்கு 70 முதல் 75 மெட்ரிக்., டன் வரை கிராண்ட் நைன் ரகத்திலும், இதர ரகங்கள் 40 முதல் 60 மெட்ரிக்., டன் மகசூளை பெறுகின்றனர்.
சுமார் 4.72 லட்சம் மெட்ரிக்., டன் வாழை பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு விளையும் வாழை பயிர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாழை விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.
