முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 22) ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தின் முன் நேற்று (மார்ச் 21) இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நேற்று காலை 11.30 மணிக்கு விசாரணை ஆணையத்தின் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் காலையில் இரண்டு மணி நேரம், பிற்பகலை ஒன்றரை மணி நேரம் என மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின் போது அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் ஒரு சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்த அவர், பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு ‘எதுவும் தெரியாது’ என்று கூறினார். இதையடுத்து விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், இன்று (மார்ச் 22) மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாசி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி இரண்டாவது நாளாக ஆணையத்தின் முன் ஆஜராகி ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்து வருகிறார். ஆணைய விசாரணை முடிந்த பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தவுள்ளார்.