மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும் வைகோ மகன் துரை வையாபுரிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவு மதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளர் ,உயர்நிலை குழு உறுப்பினர்கள் சாரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட மதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செந்தியப்பன்,உயர்நிலை குழு உறுப்பினர்கள் சேர்ந்தது மதிமுக கட்சியில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள மதிமுக கட்சி நிர்வாகிகள், கட்சி அலுவலகத்திற்கு உள்ளே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூடாது என போரட்டம் செய்தனர்.
கட்சி அலுவலகம் எங்களுக்கு சொந்தம் என்றும் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் பல மாதங்களாக கட்சியில் செயல்படாமல் உள்ளார் என்றும் தலைவர் வைகோ மீது தவறான குற்றச்சாட்டு கூறுகிறார் என நிர்வாகிகள் சரமாரியாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. வைகோ மகன் துரை வையாபுரிக்கு எல்லாவித அதிகாரத்தையும் கொடுப்பதற்கு வேலைகளை திட்டமிட்டு செய்து வருகிறார். மதிமுகவை பொறுத்த வரை உயர்நிலை குழுவை கூட்டி உயர்நிலைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகளை மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிப்பது வழக்கம்.
ஆனால் கடந்த ஓராண்டு காலமாக உயர்நிலை கூட்டத்தை கூட்டவில்லை. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் மெஜாரிட்டி இல்லாததால் கூட்டத்தை தவிர்த்து வருகிறார். கட்சிக்கு 40 ஆண்டுகள் உழைத்த திமுக தலைவர் ஸ்டாலினையே குடும்ப அரசியல் என்று சொன்னவர்தான் வைகோ. ஆனால் தற்போது தனது மகனை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளார். ஆனால் குடும்ப அரசியல் இல்லை என்கிறார் என குற்றம் சாட்டினார். மேலும், மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும் என்றும் உயர் நிலைய குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.