• Sun. Sep 15th, 2024

திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதிப்பா ?

திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கு மனநலம் பாதித்து இருப்பதால், அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சமீபத்தில், சென்னை சேப்பாக்கத்தில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது.

இதில், அக்கட்சியைச் சேர்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் என்பவர், எங்கள் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குறித்து அநாகரிகமாக பேசினார்.

கடந்த 2017-ம் ஆண்டு, தற்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் குறித்து மேடையில் அவதூறாக பேசினார். அவர் மீது, பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தற்போதும் நிலுவையில் தான் உள்ளது.

நாஞ்சில் சம்பத்துக்கு, 2015-ல் திடீரென மூளையின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன்பின், சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.

தற்போது அவர் பேச்சுகளையும், நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, நரம்பு மண்டல பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதனால் தான், நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மறந்து, மேடைகளில் அநாகரிகமாக பேசி வருகிறார்.

எனவே, அவர் பங்கேற்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *