• Sat. Apr 20th, 2024

அரசு பள்ளி ஆசிரியையின் அற்புதமான சேவை

Byமதி

Dec 12, 2021

என் உங்க பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவில்லை என்ற கேள்விக்கு, எங்கள் குழந்தைகளின் பசியையும் வறுமையையும் போக்குங்கள் தானாக படிப்பு வரும் என ஒருவர் சொல்ல மத்திய உணவு திட்டத்தை கொண்டுவந்தவர் காமராஜர்.

அவரின் வழியில் எப்படியாவது குழந்தைகளை படிக்க வேண்டும் என்ற முயற்சியில் பள்ளியில் சேரும் அன்றைய தினமே குழந்தைகளின் பெயரில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு விடுகிறது. பத்து வருடங்களுக்கு பின்,
பள்ளி படிப்பை முடித்து விட்டு வெளியே வரும்போது, மேல் படிப்புக்கு உதவியாக, ஒரு கணிசமான தொகை அவர்கள் கைகளில் கிடைக்கும்படியான திட்டம் அது. இது ஒரு அரசு பள்ளி ஆசிரியையின் அற்புதமான சேவை.

ரேகா டீச்சர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 2010 ல் உடுப்பி அருகிலுள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். மிகமிகக் குறைவான பிள்ளைகளே அப்போது அந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி அது.

ரேகா டீச்சர் அந்தப் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த பிறகு மாணவ மாணவிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பித்தது. பிள்ளைகள் சந்தோஷமாக பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள். பெற்றோர்களும் கூட மகிழ்ச்சியுடன் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்தார்கள்.

இதற்குக் காரணம் ரேகா டீச்சர் செய்த ஒரு முக்கியமான விஷயம்தான்.

தனது பள்ளியில் புதிதாக வந்து சேரும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும், ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து வருகிறார் இவர். இந்த புதிய திட்டத்தால் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருக்கிறது.

கல்வி அதிகாரிகள் ரேகா டீச்சரை அழைத்து பாராட்டினார்கள்.
“எப்படி டீச்சர் உங்களால் இது முடிகிறது? எதற்காக உங்கள் பணத்தை இந்த குழந்தைகளின் பெயரில் டெபாசிட் செய்கிறீர்கள் ?”
இந்தக் கேள்விக்கு புன்னகையுடன் பதில் சொல்கிறார் ரேகா டீச்சர்.
“காரணம் இருக்கிறது. ஏனென்றால் நான் மிக சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண். என்னுடைய பள்ளிப் படிப்பு ஒன்றும் சுலபமானதாக இருக்கவில்லை.
ஒரு சில தொண்டு நிறுவனங்களும் இன்னும் சில நல்ல உள்ளங்களும் உதவி செய்யவில்லையென்றால்
கண்டிப்பாக என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்து இருக்க முடியாது.”

“அப்படி எத்தனையோ பேர் செய்த அந்த உதவியினால்தான், பள்ளிப் படிப்பை முடித்து, ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேரவும் என்னால் முடிந்தது.
அப்போதுதான் தீவிரமாக யோசித்து பார்த்தேன்.

இந்த சமுதாயம் எனக்கு எதைக் கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான்
2014 ஆம் வருடத்திலிருந்து,
என்னால் முடிந்த இந்த சிறிய சேவையை செய்து வருகிறேன்.

இன்றைக்கு ஒரு குழந்தையின் பெயரில் நான் டெபாசிட் செய்யும் ஆயிரம் ரூபாய், பத்து வருடம் கழித்து ஒரு கணிசமான தொகையாக அந்த குழந்தையின் கைகளில் கிடைக்கும். நிச்சயமாக அந்த குழந்தையின் அடுத்த கட்ட கல்விக்கு அந்த தொகை மிகப்பெரும் உதவியாக இருக்கும். இதுவரை 63 குழந்தைகளுக்கு இப்படி டெபாசிட் செய்திருக்கிறேன்.
இந்த ஆசிரியை பணியில் இருக்கும் வரை இந்த ஆயிரம் ரூபாய் டெபாசிட் முறையை நிச்சயமாக நான் தொடர்ந்து செயல்படுத்துவேன்.”

இப்படி உறுதியோடு ஒலிக்கிறது ரேகா டீச்சரின் குரல். நம்பிக்கையோடு படித்துக் கொண்டிருக்கிறார்கள் ரேகா டீச்சர் வகுப்பில் உள்ள குழந்தைகள்.

நமக்கும் கூட இந்த மாதிரியான செய்திகள், எதிர்காலம் பற்றிய ஏதோ ஒரு நம்பிக்கையை தருகின்றன.

இந்த சமுதாயம் நமக்கு எதைக் கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு நிச்சயமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *