விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ எனும் திரைப்படம், ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய நாட்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘மாமனிதன்’ படத்திற்கு, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என டோக்கியோ திரைப்பட விருது விழாவில் தேர்வாகியுள்ளது
ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டோக்கியோ திரைப்பட விருது’ எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த ‘டோக்கியோ திரைப்பட விருது’ சர்வதேச அளவில் கலைஞர்களுக்கான சிறந்த விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டோக்கியோ திரைப்பட விருது விழாவில் , ஆசியாவின் சிறந்த படமாக ‘மாமனிதன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.சிறந்த திரில்லர், சிறந்த ஆக்சன், சிறந்த நகைச்சுவை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் என இருபதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் தகுதியான படைப்புகளையும், திறமையான கலைஞர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விருதும், பதக்கமும் வழங்கி கௌரவித்து வரும் டோக்கியோ திரைப்பட விருதுகளில், இந்த ஆண்டு ஆசியாவில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாக ‘மாமனிதன்’ திரைப்படத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்து இருப்பது தமிழ் சினிமாவுக்கான பெருமை என்கிறார் படத்தின் இயக்குநர் சீனுராமசாமி.
டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் படத்திற்கு விருது!
